×

பரமக்குடி அருகே கனமழையால் 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 

பரமக்குடி,டிச.19: பரமக்குடி அருகே புதுக்குடி கிராமத்திற்கு உட்பட்ட 250 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. இதனால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 300 ஏக்கருக்கு மேல் வைகை ஆற்று நீரை நம்பி புன்செய் நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு நன்கு விளைச்சல் அடைந்து உள்ளது.

தற்போது பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி சேதமாகி உள்ளது. புதுக்குடி கிராமத்தில் வடிகால் வாய்க்காலில் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைநீர் முழுவதும் வழிந்து ஓட முடியாமல் வயல்வெளிகளில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் 250 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

இதுகுறித்து கிராம விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறி வருகின்றனர். பரமக்குடி நகர் பகுதியில் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. நகராட்சி சார்பாக இதனை அகற்றும் பணியில் பரமக்குடி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னையாபுரம் செல்லும் பகுதியில் உள்ள ரயில் கீழ் பாலம் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பொன்னையாபுரம் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

The post பரமக்குடி அருகே கனமழையால் 250 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Paramakkudi ,Pudukkudi ,Dinakaran ,
× RELATED தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!